திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.19 திருவாலவாய் (மதுரை) - திருத்தாண்டகம் |
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துக்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
1 |
விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்
தெண்ணிலவுதென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
2 |
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
3 |
வானமிது வெல்லா முடையான் றன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
4 |
ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
சீரானைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
5 |
மூவனை மூர்த்தியை மூவா மேனி
உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
6 |
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதில்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
7 |
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
8 |
பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்
பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்
திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
9 |
மலையானை மாமேறு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை என்றலையின் உச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்குந்
துலையாக ஒருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதில்மூன்றுந் துவள வெய்த
சிலையானைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
10 |
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்
பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை
ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லாவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |